114
தமிழ் இயக்குநர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் கூறியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட கிராமம் சார்ந்த படங்களை இயக்கி தமிழில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சீனு ராமசாமி.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது படத்தில் ஒப்பந்தமான நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் படத்திற்கான படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதன் காரணமாக மனிஷா யாதவ் படத்தில் இருந்து விலகியிருக்கிறார். பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியது தற்போது பெரிய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
ஆனால், இயக்குநர் சீனு ராமசாமி இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் “ஒரு குப்பை கதை” பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி சொல்லும் காணொளியை பகிர்ந்து இருந்தார்.
அதற்கு நடிகை மனிஷா யாதவ் “நான் ஒரு குப்பை கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போல் தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். இருப்பினும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரைப்பற்றி சொன்னதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என்னை அநாகரிகமான முறையில் நடத்திய ஒருவருடன் மீண்டும் நான் இணைந்து பணியாற்ற மாட்டேன். திரு.சீனு ராமசாமி, உண்மையை சரியாக சொல்லுங்கள்” என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
இச்சம்பவம் திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.