301
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் தனது ஓய்வு குறித்து பேசும்போது மனநல மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டார்.
2023 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து சில விமர்சனங்களும் எழுந்தன.
எனினும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின் தனது மனவேதனை குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் சாமர்த்தியமாக எதுவும் பேசவில்லை. ஆனால் கடந்த 4 முதல் 5 ஆண்டுகள் என் வாழ்க்கை இருண்ட பக்கத்தில் சிக்கிக் கொண்டதாக உணர்ந்தேன்.
என்னுடைய மனநலத்திற்காக நான் நிபுணர்களின் உதவியை கூட நாடி, இந்த இருண்ட காலத்தில் என் வாழ்க்கையில் அனைத்திற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தயார் செய்து வந்தேன்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் தொடர்பாகவும் கடுமையாக உழைத்தேன்.
பேட்டிங்கிலும் கூட கவனம் செலுத்தி பயிற்சி எடுத்தேன். இதற்காக அமெரிக்காவுக்கு சென்று Baseball பயிற்சி கூட எடுத்து வந்தேன்.
எந்த நாள் உத்வேகம் குறைகிறதோ, ஐயோ! காலை எழுந்திருக்கும்போது இன்று பந்து வீச வேண்டுமா, பேட்டிங் செய்ய வேண்டுமா என்கிற அலுப்பு ஏற்படுகிறதோ அன்று தான் என் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.