வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், ஆனால் அதற்கான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், வங்கிகளால் உரிய நிவாரணம் வழங்கப்படுமாயின், வங்கிகளுக்கு பணம் எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “அந்த நிவாரணம் வழங்குவதற்கான பணம் நிதி அமைச்சு ஊடாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அது நிதிக் கொள்கை நடவடிக்கையாகும். அது என்ன முறையில் வழங்கப்படும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியாது.
அது நிதி அமைச்சின் ஒரு அறிவிப்பாகும். நிதி அமைச்சு எவ்வாறு பணத்தை அனுப்பி அதனை செய்யும் என்பது அவர்களுக்கே தெரியும். அந்த நடவடிக்கை நடவடிக்கைக்கும் எங்களும் தொடர்பில்லை. அது நீண்ட தாமதத்தை ஏற்படுத்த கூடும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற கடன் தொகைக்கு வருடாந்தம் 10மூ உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என, அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.