உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படம் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 65 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படத்தினை 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக படக்குழு உருவாக்கியுள்ளது.
படத்தின் தயாரிப்புக்காக மட்டும் லைகா நிறுவனம் ரூபாய் 250 கோடிகளை செலவு செய்தது. படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். இது மட்டும் இல்லாமல் லைகாவுக்கும் ஷங்கருக்கும் பிரச்னை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கே நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலமான 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் 2024ஆம் ஆண்டுதான் ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை லைகா நிறுவனம் ஏற்படுத்தி இருந்தது. இதனால் படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், படத்தின் வசூல் அப்படியே சுருங்கிவிட்டது.