126
இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை என்று நடிகை குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகத்தில் நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத குஷ்பு, தற்போது திரிஷாவுக்காக குரல் கொடுத்திருக்கிறார் என கூற, அவருக்கு பதில் கொடுக்கும்போது ‘சேரி மொழியில்’ பேச முடியாது என்று குஷ்பு குறிப்பிட்டார்.
இந்த விடயம் சர்ச்சையாக வெடித்தது. அதன் பின்னர் குஷ்புக்கு எதிராக காயத்ரி ரகுராம் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு விளக்கம் அளித்த குஷ்பு, அவர் தவறான நோக்கத்தில் கூறவில்லை என்றும், சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம் என்றும் கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, ‘நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றம் நடைபெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை’ என்றார்.
அத்துடன், நான் கூறிய வார்த்தை தவறு இல்லை. நான் அதில் தெளிவாக இருக்கிறேன், தவறு செய்திருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருப்பேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று எண்ணி போராடி உள்ளார்கள். ஒரு வரமாக போராட வரேன் என்று சொன்னார்கள், ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு 20 பேருடன் வந்து போராடி உள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.