83
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தினமும் 5000 பேருக்கு உணவு வழங்க உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழையை பெய்தது.
கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடானது.
மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளால் பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ளது.
அரசுடன், தன்னார்வலர்கள் மற்றும் பல கட்சியினை சேர்ந்தவர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தினமும் 5,000 பேருக்கு உணவு விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகளை கொண்டு சேர்க்க இருக்கிறோம். இன்னும் அத்தியாவசிய பொருட்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
சூழலை ஆராய்ந்து எங்கே என்ன தேவைப்படுகிறதோ அதை கொண்டு சேர்க்க ஒரு தொடர்பு மையத்தினை அமைத்துள்ளோம்.
நிலைமை சரியாகும் வரை தினமும் 5000 பேருக்கு உணவு சமைத்து விநியோகம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.