191
பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நானா படேகர் இந்தி மற்றும் மராத்திய சினிமாவின் முக்கிய பிரபலம் ஆவார்.
இவர் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், மராத்தியில் 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார்.
முன்னாள் ராணுவ அதிகாரியான இவருக்கு, கலைத்துறையில் அளித்த பங்களிப்பிற்காக 2013ல் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதற்கு மன்னிப்பு கோரும் விதமாக ஒரு வீடியோவை நானா படேகர் வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒருவரை அடிப்பது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு படத்தின் காட்சிக்காக ஒத்திகையில் நாங்கள் இருந்தோம். அப்போது ஒருவர் உள்ளே வந்தார். அவரை, காட்சியில் இருந்தது போல் அடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப சொன்னேன். ஆனால் அதன் பின்பு தான் அவர் எங்கள் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்தது.
உடனே அவரை அழைக்க நினைத்தேன். ஆனால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். மற்றபடி என்னுடன் புகைப்படம் எடுக்க வந்த யாரையும் நான் எதுவும் சொல்லவில்லை.
இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது. ஏதேனும் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இனி இப்படி செய்ய மாட்டேன் ” என்று கூறியுள்ளார்.
இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.