94
வெஸ்ட் இண்டீசுஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
ஆன்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சாம் கர்ரன், அட்கின்சன் பந்துவீச்சில் 4 தொடக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மிரட்டல் வீரர்களான பிரண்டன் கிங் (17), ஹெட்மையர் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23/4 என தத்தளித்தது. அப்போது கேப்டன் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சரிவில் இருந்து மீட்டார்.
அவருக்கு உறுதுணையாக ரூதர்போர்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்களின் பார்ட்னர்ஷிப்பினால் 150 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் கடந்தது.
ஆனால் ரூதர்போர்டு 63 ரன்கள் ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டன் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சரிவுக்குள்ளளானது. ஹோப் 68 ரன்களில் அவுட் ஆக, ஷெப்பர்ட் 19 ரன்கள் எடுத்தார்.
அல்ஸாரி ஜோசப் 14 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. சால்ட் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கிராவ்லே, டக்கெட் இருவரும் மோட்டி ஓவரில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் சிக்ஸர், பவுண்ரிகளை விளாசினார்.
அவர் 72 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார்.
அதன் பின்னர் ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் கூட்டணி இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இருவரும் களத்தில் நின்று 33வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர்.
பட்லர் 45 பந்துகளில் 58 ரன்களும், புரூக் 49 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்ததுடன், தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.