104
தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், குறிப்பாக கிருபாகரன் என்னும் அரசியல் கைதிக்கு, அவரது ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி புதிய புதிய வழக்குகளை உருவாக்கி வருகிறார்கள். இது மிகப்பெரும் அநியாயமாகும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நீதி அமைச்சர் என்னும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படவேண்டும்.
2015 இல் ஜனாதிபதி ரணில் அமைச்சராக இருந்தபோதே ஜெனிவாவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சொன்னார்கள். அதனை நீக்குவதாகவும் சொன்னார்கள். ஆனால், அந்த சட்டத்துக்கு கீழேதான் இவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு உள்ளனர்.
ஜனாதிபதி உட்பட முக்கியமான அமைச்சர்கள் அனைவரும் இறந்தவர்களை நினைவுகூரலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த வகையில் நினைவுகூர சென்ற போது நினைவுகூர முடியாது என பொலிஸாரால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
முன்னாள் போராளி குடும்பங்களுக்கும் மாவீரர்களுடைய குடும்பங்களுக்கும் உணவுப் பொதிகளை வழங்கினால் அதுவும் பயங்கரவாதமாகுமா?
அப்படியாயின், கடந்த மாதம் நீதிமன்றம் ராஜபக்ச தரப்பை குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.
எதிர்காலத்தில் ராஜபக்சக்களை குற்றவாளிகள் என்று சிறைக்கு தள்ளி, அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்படுவதாக வைத்துக்கொண்டால், அவர்களுடைய ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் எவருமே சொந்தம் கொண்டாட முடியாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.