102
துபாயில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய அணிகள் மோதும் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. இந்த 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
“குரூப் ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
“குரூப் பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணியின் துடுப்பாட்ட வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் சிதறடித்தனர்.
அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 9.1 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்து நேபாள அணியை நிர்மூலமாக்கினார். இதில் 3 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.
நேபாள அணி சிட்டுக்கட்டு போல் சரிந்ததால் 22.1 ஓவர்களில் 52 ரன்களுக்கு சுருண்டது.
அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட் கூட இழக்காமல் 7.1 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.
இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றியும், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியும் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.