155
தமிழக மாவட்டம் திருச்சியில் சொத்து தகராறில் சகோதரர்கள் சேர்ந்து, தங்கள் சித்தப்பா மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
முருகேசனின் பெரியப்பா ராஜா குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எனினும், சொத்து ரீதியாக சமீப காலங்களில் இரு குடும்பத்தினரும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகி, இரு தரப்பினரிடையே மோதலாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராஜாவின் மகன்களான செல்லத்துரை, பாலையா, பொன்னுச்சாமி ஆகியோர் முருகேசன், அவரது சகோதரர் கருப்பையா மற்றும் உறவினர் பிச்சை ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அவர்களின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர், வெட்டுப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகேசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முருகேசனின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து புத்தாநத்தம் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.