114
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கில்கிட்டிலிருந்து ராவல்பிண்டி நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்தின் மீது சிலாஸ் என்ற இடத்தில் நேற்று மாலை 6:30 மணியளவில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதலின்போது காயமடைந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதியுள்ளது.
இந்த தாக்குதலில் ஓட்டுநர் உட்பட 9 பயணிகள் கொல்லப்பட்டனர்.
அதில் 2 பேர் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் 26 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், “இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்படும்” என்று டயமர் காவல் கண்காணிப்பாளர் சர்தார் ஷெஹ்ரியார் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் பாகிஸ்தான் முழுக்க 99 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.