அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் பங்கேற்றார்.
அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே ஜோ பைடன் உடல் நிலை குறித்து விமர்சித்து வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில், அதிபர் தேர்தலிருந்து பின்வாங்குமாறு ஜோ பைடனின் நெருங்கிய வட்டாரங்கள் ஜோ பைடனிடம் வலியுறுத்திவருவதாகத் தகவல் வெளியாகிவருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஹஜோ பைடன் மீண்டும் தேர்தலில் நிற்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என தன் கூட்டாளிகளிடம் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஜோ பைடனின் வயதும், அவருடைய உடல், மனநிலையும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சரியில்லை என அவருடைய நெருங்கிய வட்டாரங்களே தெரிவித்து வருவதால், அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் என எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகிறது.
இதற்கிடையில், ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் டிஜே டுக்ளோ தன் எக்ஸ் பக்கத்தில், “ஜோ பைடன் கட்சியின் வேட்பாளர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். ஆதாரமற்ற வதந்திகளை நம்ப இது சாதாரண தேர்தல் அல்ல. மோசமான குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களின் வாழ்வை எப்படி மோசமாக்குவார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தேர்தலைச் சரியாக அணுகுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.