வட பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தில், இதுவரையான காலப்பகுதியில் அங்கு 3 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தலைமையில் நடைபெற்ற டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில், காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.