114
நைஜீரியாவில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மீது தவறுதலாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் கடுனா (Kaduna) மாநிலத்தின் இகாபியில் மத வழிபாட்டிற்காக குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் கூடியிருந்தனர்.
இவர்களின் மீது இராணுவத்தின் டிரோன் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களில் வசிப்பவர்களை பணயக்கதிகளாக வைத்து பணம் கேட்டு போராடி வந்தனர்.
இந்த ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் அந்நாட்டு இராணுவம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவர்களை தாக்கும் பொருட்டு தவறுதலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
உளவுத்துறையின் நம்பத்தகுந்த செய்தியின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இந்த டிரோன் தாக்குதல் நடந்ததாக, நைஜீரிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எட்வர்ட் புபா தெரிவித்துள்ளார்.
முகமது நபியின் பிறந்த நாளை கொண்டாட இஸ்லாமியர்கள் கூடியிருந்த நிலையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் தனியார் ஊடகத்திடம் “விமானம் இரண்டு குண்டுகளை வீசியது. முதல் முறையாக குண்டை வீசி கொன்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களின் சடலங்களை எடுத்துவரச் சென்ற எங்களின் சிலர் மீது அடுத்த குண்டு வீசப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நைஜீரிய இராணுவப் பிரிவின் தலைவர் கூறுகையில், ”நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் கவனக்குறைவாக அந்த நடவடிக்கைகள் பொதுமக்களை பாதித்துள்ளது” என்று தெரிவித்தார்.