104
மிச்சாங் புயல் கரையை கடப்பதால் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 740 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு 840 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கிழக்கில் சுமார் 910 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதனை தொடர்ந்து புயலாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளது.
புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு இந்தோனேசியா பரிந்துரைத்த பெயரான “மிச்சாங்” என்று பெயர் வைக்கப்படும்.
புயலாக வலுவடைந்த பின்னர் வட lமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் திங்கட்கிழமையன்று நெருங்கும்.
அதன்பின்னர் தெற்கு ஆந்திராவின் கரையை ஒட்டி, வடக்கு நோக்கி நகர்ந்து 5ஆம் திகதி காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் ஆகிய பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 100கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் வாய்ப்பு உள்ளது.
புயல் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.
அதிகனமழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகின்ற 4ஆம் திகதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.