Home » பிக் பாஸ் – 7 -`மாயா… மாயா… எவிக்ஷனும் ஒரு மாயா…’ அசிமை ஃபாலோ செய்கிறாரா விஷ்ணு?

பிக் பாஸ் – 7 -`மாயா… மாயா… எவிக்ஷனும் ஒரு மாயா…’ அசிமை ஃபாலோ செய்கிறாரா விஷ்ணு?

by Tamilan Jeyachandhiran
0 comment
“மத்த பிக் பாஸ் ஷோக்கள்ல நடக்கற சில விஷயங்கள் இங்க நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். யாரையும் ஒருமையில் பேசாதீங்க. நட்பில் கூட இந்த மரியாதை முக்கியம்” என்று ஜோவிகாவுக்கு எச்சரிக்கை கொடுத்தார் கமல்.
மாயா சொல்வது போல பிக் பாஸ் என்பது வெறும் கன்டென்ட் மட்டும் இல்லை. ஒரு துண்டு வாழ்க்கை. அதில் ஒருவர் என்னவாகப் பதிவாகிறார் என்பதுதான் அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலும் இதேதான். ஒருவர், மற்றவரின் மனதில் என்னவாகப் பதிவாகிறார் என்பதை அவரது செயல்கள்தான் தீர்மானிக்கின்றன.
ஒருவர் அடிப்படையில் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவரைப் பற்றிய சித்திரம் மற்றவர்களின் மனதில் வரையப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
ஒட்டுப் போட்ட கோட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்த கமல், நேரடியாக விஷயத்திற்குள் வந்தார்.
“இவங்க சண்டை போட்டதைப் பற்றி நிறைய விசாரிச்சுட்டோம். ஆனால் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. குடுமிப்பிடி சண்டைக்கு நடுவுல தலைவர் என்னதான் செஞ்சார்? புறம் பேசாமல் அவரிடமே விசாரிப்போம்” என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.
‘ஹய்யோ… என்னையே குறுகுறுன்னு பார்க்கறாரே… பார்க்கறாரே’ என்றபடி சங்கடத்துடன் நின்றிருந்தார் சரவணன்.
‘கடந்த வார கேப்டன் எப்படிச் செயல்பட்டார்?’ என்று மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார், கமல்.
“அண்ணன் ரொம்ப நல்லவரு… வல்லவரு… பொறுமையானவரு. இரண்டு வீட்டிற்கும் பொதுவா இருந்தாரு… நிதானமா ஹாண்டில் பண்ணாரு” என்கிற பாசிட்டிவ் கமெண்ட்டுகள் ஒரு பக்கம் வந்தாலும் ‘கமாண்டிங்கா இல்ல’ என்கிற நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வந்தன.
“சரி இருங்க… அவர் கிட்டயே நேரடியா விசாரிக்கலாம்’ என்ற கமல், ஓர் இடைவெளி விட்டு, “பிக் பாஸ்… நீங்க என்ன சொல்றீங்க… ஏன்னா சரவணன் கிட்ட கேள்வி கேட்டா… எப்படியும் அவர் உங்க கிட்டதான் வந்து நிக்கப் போறாரு. அதுக்குத்தான் ஸ்ட்ரையிட்டா உங்க கிட்டயே வந்துட்டேன்” என்று கலாய்த்தது அநியாயமான குறும்பு. வெட்கத்தில் தலை சொறிந்தார் சரவணன். “அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க… மனசெல்லாம் புண்ணா இருக்கு தம்பி. அவ்ளோ கேள்விகள் கேட்டு என்னை இம்சைப்படுத்திட்டாங்க” என்று பிக் பாஸ் கண்கலங்கினார். பிக் பாஸையே கதற விட்ட இந்த சீசனின் மக்களும் கேப்டனும் உண்மையிலேயே கில்லாடிகள்தான்.
பிறகு சரவணனின் விளக்கத்தையெல்லாம் கேட்ட கமல், “தலைமைப் பதவி என்பது சொகுசு கிடையாது. அதுவொரு பொறுப்பு. மக்கள் மேல் அக்கறையுடன் ‘இதுதான் என் முடிவு. பதவி போனாலும் போகுதுன்னு’ன்னு உறுதியா இருக்கணும். ‘நானே உள்ளே போறேன்’ன்னு சொல்றதுக்கு அவ்ளோ நேரம் எடுத்துக்கிட்டீங்க… இந்தத் தியாகத்தை முதல்லயே செஞ்சிருக்கலாம். நீங்க கேப்டனா இல்லாம ரெண்டு பக்கமும் தூது மட்டும்தான் போயிருக்கீங்க. இதை விடவும் போன வாரத்துல விஜய் செஞ்சது பெட்டர். ‘இப்பத்திய பசியைப் பார்க்கலாம்’ன்னு உறுதியா ஒரு முடிவு எடுத்தார். ஒருத்தர் எல்லோருக்கும் நல்லவனா இருக்க முடியாது. நான் எடுக்கற முடிவுகள் பத்தி இங்க இருக்கறவங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனா நான் உறுதியா முடிவெடுக்கலைன்னா பொறுப்பிலிருந்து தவறி விடுவேன்” என்றெல்லாம் கமல் அளித்த லெக்சர், தலைமைப்பதவிக்கான அடிப்படை இலக்கணம். ஒரு தலைவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு பிரேக் விட்டுத் திரும்பிய கமல், அகம் டிவி வழியாக உள்ளே செல்வதற்கு முன்னர், “இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது. இதை ரகசியமா வெச்சுக்கங்க. அவங்களுக்கு சொல்லாமல் ஒரு ஆட்டம் ஆடலாம்” என்று பார்வையாளர்களிடம் நமட்டுச் சிரிப்புடன் சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
எடுத்த எடுப்பிலேயே ஜோவிகாவை அழுத்தமாக அழைத்து பயமுறுத்தி “நீங்க Saved” என்று சிரித்த கமல் “ஒரு விஷயம். யாரையும் அவமரியாதையா பேசக்கூடாது. மத்த பிக் பாஸ் ஷோக்கள்ல நடக்கற சில விஷயங்கள் இங்க நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். யாரையும் ஒருமைல பேசாதீங்க. நட்பில் கூட இந்த மரியாதை முக்கியம்” என்று வார்னிங் தந்ததும் “நானே அதைப் பற்றி யோசிச்சேன்” என்று தன் தவற்றை ஒப்புக் கொண்டார் ஜோவிகா.
ஜோவிகாவிற்கு வார்னிங்; விஷ்ணுவை சாய்ஸில் விட்டதற்கு என்ன மீனிங்?
ஆனால் இதே போல் அட்ராசிட்டி செய்த விஷ்ணு, ‘வாயை ஒடைச்சிடுவேன்’ என்ற பிரதீப் ஆகிய இருவரின் வன்முறைப் பேச்சினைப் பற்றி கமல் எதுவுமே சொல்லாதது நெருடல். “சரி. வழக்கமா குறும்படம் பார்ப்போம். இப்ப ஒரு குதூகலப் படம் பார்ப்போம்” என்று கமல் அடுத்து திரையிட்டது ‘ஆரிய மாலா’ டாஸ்க் பற்றியது. யுகேந்திரன், ரவீனா, விசித்ரா ஆகிய மூவரும் எப்படியெல்லாம் அதில் அவஸ்தைப் பட்டார்கள் என்பதை குறும்படமாக விளக்கியது, அந்த வீடியோ. இதில் விசித்ராவின் அவஸ்தைதான் பெரியது. இப்போது பார்த்த போது கூட விசித்ராவிற்கு கண்ணீர் வந்துவிட்டது. “எனக்கு சவுண்டுன்னா அலர்ஜி” என்றார். “டாஸ்க்குகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவதில்லையோ?” என்று கமல் கேட்க, “ஆமாம் சார்.. ஆனா சில டாஸ்க் கஷ்டம்தான்” என்றதும் “மக்கள் உங்களைக் குறைவா எடை போடலை. நீங்க Saved” என்று அவர் காப்பாற்றப்பட்ட தகவலையும் சொன்னார்.
“சின்ன வீட்டார் உங்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார்கள். நீங்களும் பதிலுக்கு ஒரு பாட்டு ரெடி பண்ணி வெச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். இப்ப அதைப் பாடுங்க” என்று கமல் கேட்டுக் கொண்டதும் ‘காசு மேல காசு வந்து’ பாடலின் டியூனில் தாங்கள் எழுதி வைத்திருந்த பாடலை உற்சாகமாக தாளத்துடன் பாடினார்கள். “சின்ன வீட்டார் எழுதிய பாடலில் எனக்கு விமர்சனம் இருக்கு. அதில் சில வரிகள் தனிப்பட்ட தாக்குதல்களாக இருந்தன. நீங்க எழுதினதுல அது இல்ல” என்று சுட்டிக் காட்டிய கமல், அடுத்தபடியாக சுரேஷை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். “இங்கலீஷ்ல கமெண்ட்ரிலாம் கொடுத்தீங்க… அது நம்ம தேசிய மொழி. இப்ப பண்ணுங்களேன்” என்று கேட்கக் கூச்சத்துடன் எழுந்து வந்த சுரேஷ், வழக்கமாக ஹைடெசிபலில் கத்தும் பாணியில் வாய்க்கு வந்தபடி ஆங்கிலம் மாதிரியான வாசனையுடன் கூடிய ஒரு மொழியில் கத்தினார். பிறகு உற்சாக ஆவேசத்தில் பூர்ணிமாவின் அருகில் சென்று அவர் கையைப் பிடித்து விட்டு ‘அய்யய்யோ தொட்டுட்டேன்’ என்று சட்டென்று பின் வாங்கினார். (மாலை போட்ட அனுபவம் இன்னமும் மறக்கலை போல!).
கமல் பிரேக்கில் சென்ற பிறகு, அடுத்தது ‘எவிக்ஷன் அறிவிப்பாதான் இருக்கும்’ என்கிற கவலையில் மக்கள் ஆழந்தார்கள். “பூர்ணிமா போயிட்டா நானும் போயிடுவேன்” என்று மாயா சொன்னது அபத்தமான ஸ்டேட்மெண்ட். ஒன்று, “மற்றவர்களை வெச்சு செய்வேன்… தூக்கிடுவேன்” என்று டெரராக பேசுகிறார் மாயா. இல்லையென்றால் “வீட்டுக்குப் போயிடுவேன்” என்று மிக எளிதாகச் சொல்கிறார். பிக் பாஸ் என்பது மிகப் பெரிய வாய்ப்பு என்பது இவர்களுக்குத் தெரியும். என்னமோ இங்கே காவிய நட்பை வளர்க்க வந்த மாதிரி இவர்கள் அசட்டுத்தனமாக உணர்ச்சிவசப்படுவது முதிர்ச்சியின்மை. சின்ன விஷயத்திற்கு கூட ‘வீட்டுக்குப் போயிடுவேன்’ என்று மாயா அடிக்கடி செல்வதும் புத்திசாலித்தனமல்ல!
பிரேக் முடிந்து திரும்பிய கமல், நிக்சனுக்கும் பிரதிப்பீற்கும் இடையில் நிகழ்நத காரசாரமான வாக்குவாதத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “நான் ரூல்ஸ் ஃபாலோ பண்ணலைன்னு சொல்ல யாருக்கும் இங்க தகுதியில்லன்னுதான் சார் சொன்னேன். நிக்சனைச் சொல்லல. அவன் ரொம்ப திறமையான பையன்” என்று பிளேட்டைத் தலைகீழாக மாற்றினார் பிரதீப். இதையே ஒரு டாஸ்க்காக மாற்றிய கமல் “இந்த வீட்டில் தொடர யாருக்கெல்லாம் தகுதியில்லை. காரணத்தோட சொல்லுங்க” என்றார். இதெல்லாம் பிக் பாஸ் ஆட்டத்தின் சூட்சுமங்கள். பொதுவில் ஒருவரின் பெயரைச் சொல்லி பகையை அதிகரித்துக் கொண்டால் எதிராளியின் மனதின் வெறுப்பின் லேயர்கள் படிந்து கொண்டே சென்று ஒரு கட்டத்தில் பயங்கரமாக வெடிக்கும். பிக் பாஸிற்கு அதுதான் ‘கன்டென்ட்’
‘யாருக்கு தகுதியில்லை’ என்கிற பட்டியலில் விஷ்ணு மற்றும் வினுஷாவின் பெயர்கள் அதிகமாக உச்சரிக்கப்பட்டன. விஷ்ணுவிற்கான காரணம் அவரது மிகையான கோபம் என்பது வெளிப்படை. அதே போல் செயலின்மைதான் வினுஷாவிற்கான காரணம். “இவங்க மனசுல நான் இல்லாம இருக்கலாம். ஆனா மக்கள் மனசுல இருப்பேன்” என்று விஷ்ணு சொல்வதைப் பார்த்தால் அவர் கடந்த சீசனில் வந்த அசிமை ஃபாலோ செய்ய நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் சில காம்பினேஷன்களுக்கு பூட்டு எப்போதும் திறக்கும் என்று சொல்ல முடியாது. “இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்” என்று தயக்கமாகச் சொன்னார் வினுஷா. (முதல்ல சாவியைப் போட்டு வண்டியை ஆன் பண்ணுங்கம்மா!).
‘இதுவரை சேவ் செய்யப்பட்டவர்கள்…’ என்று கமல் சொல்லத் துவங்கும் போது, வழக்கம் போல் துடுக்குத்தனமாக பிரதீப் கையைத் தூக்க, “என்னதிது… இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க… நீங்க Saved” என்று கமல் சொன்னவுடன் பார்வையாளர்களின் மத்தியிலிருந்து பலத்த கைத்தட்டல் கேட்டது. சில சமயங்களில் பிரதீப் செய்வது அபத்தமாகவும் அராஜகமாகவும் இருந்தாலும் ‘இவன் ஏதோ வித்தியாசமா செய்யறான்ப்பா’ என்கிற விஷயம் மக்களுக்குப் பிடித்திருக்கிறது.
இந்தச் சமயத்தில் மிகச் சரியாக மாயாவைக் கோர்த்து விட்டது கமலின் டைமிங் குறும்பு. “’மக்கள் மட்டும் பிரதீப்பிற்குக் கைத்தட்டினா, நான் இந்த வீட்டை விட்டு உடனே போயிடுவேன்’ என்று மாயா முன்பு அலட்டிக் கொண்டிருந்தார். இப்போது அதை ஞாபகப்படுத்திய கமல் “என்ன இப்படிப் பண்ணீட்டிங்க? என்று பார்வையாளர்களிடம் பாவனையாகச் சலித்துக் கொள்ள, அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு வலுக்கட்டாயமான சிரிப்பைத் தந்தார் மாயா. (வேற வழி!). அடுத்ததாக அக்ஷயா காப்பாற்றப்பட்ட செய்தியையும் கமல் சொல்ல ‘ஹப்பாடா… இன்னமும் ஒரு வாரத்திற்கு கவலையில்ல’ என்பது மாதிரி நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அக்ஷயா.
மாயா… மாயா… எவிக்ஷனும் ஒரு மாயா…
அடுத்ததாக வெற்று கார்டை பார்வையாளர்களிடம் எடுத்துக் காட்டிய கமல், குறும்பாகக் கண்ணடித்து விட்டு அகம் டிவி வழியாக உள்ளே சென்றார். ஒரு வேடிக்கைக்குப் பிறகு விஷ்ணு காப்பாற்றப்பட்ட செய்தியை அவர் சொல்ல, ஆவேசமாக எழுந்து வந்த சுரேஷ், பாசத்துடன் விஷ்ணுவை கட்டியணைத்துக் கொண்டார். ஆக, மீதமிருந்தவர்கள் பூர்ணிமா மற்றும் மாயா. “அடடா… இங்க கூட இணைபிரியாத தோழிகளா இருக்கீங்களே?!” என்று கமல் அடித்த கமென்ட் சிறப்பானது.
“பூர்ணிமா போனா நானும் போயிடுவேன்னு மாயா சொன்னாங்க.,. நீங்க எப்படி?” என்று கமல் விசாரிக்க “அப்படில்லாம் இல்லை சார்” என்று தயக்கத்துடன் சொன்ன பூர்ணிமா, பிறகு மாயாவைக் குற்றவுணர்ச்சியுடன் பார்த்தார். ஒரு ஆட்டத்திற்குள் வந்த பிறகு நட்பிற்கு அடிமையாவது புத்திசாலித்தனம் அல்ல! வெளியில் சென்று அந்த நட்பை நீருற்றி உரம் போட்டு நன்றாகவே வளர்க்கலாம்.
“இவங்க ரெண்டு பேருல யார் போவா?” என்று வழக்கமான ஆட்டத்தை ஆரம்பித்து சஸ்பென்ஸை இழுக்க விரும்பினார் கமல். இதில் மாயாவின் பெயர் அதிகமாக வந்தது. மற்றவர்களின் மண்டையைக் கழுவுகிறாராம். ‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்கிற கதையாக மாயாவுடன் இணைந்த பூர்ணிமாவும் கெட்ட பெயர் வாங்குகிறாராம். ‘எவிக்ஷன் இருக்காது’ என்று முதலில் சரியாக யூகித்தவர் பிரதீப். வேறு சிலரும் இதை வழிமொழிந்தார்கள்.
மாயா சென்று விடுவாரோ என்கிற டென்ஷனில் அப்போதே கலங்கத் தொடங்கிவிட்டார் பூர்ணிமா. “நான் ஒன்லி கன்டென்ட்தான் சார்” என்றார் மாயா. “மக்களும் ஒரு கன்டென்ட் வெச்சிருக்காங்க. அதைப் பார்க்கறீங்களா?” என்று எவிக்ஷன் கார்டை எடுத்துக் காட்டினார் கமல். அது பிளாங்காக இருந்ததைப் பார்த்ததும் காம்பவுண்ட் தோழிகளுக்கு ஒரே குஷி. இன்னமும் ஒரு வாரத்திற்கு ஆசையாக வம்பு பேசலாம். பூர்ணிமாவின் எல்லைத் தாண்டிய தீவிரவாதச் செயல் பற்றிய வார்னிங்கையும் தந்த கமல், “நீங்க வைக்கக்கூடாத இடத்துல காலை வெச்சீங்கன்னா… மக்கள் வாக்குப் பெட்டில கை வெச்சுடுவாங்க” என்று ஜாலியான எச்சரிக்கையைத் தந்தார்.
சின்ன வீட்டிற்கு ஷிஃப்ட்டான துரதிர்ஷ்டசாலிகள்!
“ஓகே. வரம்பு மீறல்கள் இல்லாம விளையாடுங்க. மக்களை மகிழ்விப்பது முக்கியம். நீங்க மட்டுமே மகிழ்ந்துட்டு இருக்காதீங்க…” என்றபடி விடைபெற்றார் கமல்.
“எனக்கு ஸ்பேஸ் கொடுக்கறவங்க கிட்ட மட்டும்தான் நான் அதிகமா பேசுவேன். பேசறது ஒரு குத்தமா? மத்தபடி நான் பிக் பாஸ் வீட்டுக்குத்தான் விசுவாசமா இருந்திருக்கேன்” என்று புலம்பினார் பூர்ணிமா. பட்டியலின் கடைசியில் வந்தாலும் மாயாவிடம் மாற்றம் தெரியவில்லை. ‘இந்த நிக்சன் பயலுக்கு ஒரு பாயாசத்தைப் போட்டுற வேண்டியதுதான்’ என்கிற மோடில் இருந்தார். ‘தகுதியில்லை’ என்கிற கேட்டகிரியில் வந்த வினுஷா, மூசுமூசுவென்று கண்ணீர் பெருக அழுது கொண்டிருக்க மணியும் ரவீனாவும் அவரைச் சிரிக்க வைத்து ஆறுதல் சொன்னார்கள்.
சின்ன வீட்டிற்கு ஷிஃப்ட்டாக வேண்டியவர்களை கேப்டன் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். கடந்த வாரம் போல யுகேந்திரனுக்கு சங்கடமான நெருக்கடியில்லை. சில குணாதிசயங்களைப் பட்டியல் இட்டிருந்த பிக் பாஸ் அதற்குப் பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். ‘மரியாதை இல்லாமல் பேசுகிறவர்’ என்பதற்கு விஷ்ணுவைத் தேர்ந்தெடுத்தார் யுகேந்திரன். (போய் மறுபடியும் பாத்திரங்களைக் கழுவு!).
இப்படியாக அவர் தேர்ந்தெடுத்த பட்டியல். மாயா, வினுஷா, பூர்ணிமா, சரவணன், பிரதீப் மற்றும் விஷ்ணு. காம்பவுண்ட் சுவர் தோழிகள் ஒரே வீட்டில் தங்குவது அவர்கள் செய்த பாக்கியம். ஜாலியாக வம்பு பேசலாம். “நாமதான் இங்க சீனியர். பெட்ல நமக்குத்தான் முன்னுரிமை” என்று மாயாவிடம் பெருமை பேசினார் விஷ்ணு. (மேய்க்கறது எருமை, இதில என்ன பெருமை?!). ஜோவிகாவும் சுரேஷூம் வீட்டு நினைவில் கண்ணைக் கசக்க, மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள். கூல் சுரேஷிற்கு இப்படியொரு சென்ட்டிமென்ட் பக்கம் இருப்பது சற்று ஆச்சரியம்தான்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00