176
இந்திய நாடாளுமன்றத்தில் அவை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து, இருவர் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவை வழக்கம் போல நடைபெற்று வந்தது.
அப்போது இரண்டு நபர்கள் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்கு தாவிக் குதித்துள்ளனர்.
அதில் ஒருவர் வண்ணப் புகை குண்டினை வீசி, அவையை புகை மண்டலமாக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் இருவர் வண்ணப் புகை குண்டுகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படவில்லை.
நாடாளுமன்றத்தின் உள்ளே புகை குண்டு வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர் பெயர் சாகர் ஷர்மா என தெரிய வந்தது.
இவருக்கு மைசூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் ப்ரதாப் சிம்ஹா, பார்வையாளர் அனுமதி நுழைவுச்சீட்டு வழங்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
வண்ணப் புகை குண்டுகள் வீசப்பட்ட போது காங்கிரசின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி அவையின் உள்ளே இருந்துள்ளார்.
அடையாள அட்டை உட்பட எந்த ஆவணங்களும் இல்லாமல் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தது எப்படி என்று காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உட்பட, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா, பார்வையாளர் பாஸ் முறையை தடை செய்தார்.