77
சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
சத்தீஸ்கரில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7ம் திகதி தேர்தல் நடைபெற்றது. அதில் 70.87 சதவிகித வாக்குகள் பதிவாகின.
அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக, மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
மேலும், 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவும் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.
இரண்டு மாநில தேர்தல்களும் இன்று தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரு மாநில தேர்தல் குறித்தும் தனது வாழ்த்துக்களை X தளத்தில் வெளியிட்டுள்ளார்
“மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம்” என்று மத்திய பிரதேசத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
“சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று இரண்டாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மதிப்புமிக்கது” என்று சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தலுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.