222
திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள் கல்லூரியில், 700க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அவர்களில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த முருகேசன், ஓமனா தம்பதியினரின் மகளான சத்திய ப்ரீத்தி (20) இந்த கல்லூரியில் இறுதியாண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் கல்லூரிக்கு வந்தனர்.
அப்போது மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக சக மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சக மாணவிகள், கல்லூரி விடுதியில் இருந்து அனுமதி வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றால் கூட கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகளால் பேசுவார். வீட்டில் சொன்னால் படிப்பு நின்று விடும் என்ற பயத்தால் வீட்டிற்கு சொல்லாமல் இருக்கிறோம்.
மேலும் ஸ்காலர்ஷிப்பில் தான் நாங்கள் படித்து வருகிறோம். ஸ்காலர்ஷிப் வரவில்லை என்றால் பணத்தை கட்டச் சொல்லி ஆபாசமாக திட்டியதாலேயே மாணவி உயிரிழந்தார் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார், உதவித்தொகையில் தான் என் மகள் படித்து வந்தாள். உதவித்தொகை வர காலதாமதம் ஆனதால், பணத்தை கட்டச் சொல்லி போனில் என்னிடம் ஆபாசமாக கல்லூரி முதல்வர் பேசினார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தேன். அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்து கல்லூரி முதல்வரை விசாரித்துள்ளனர்.
இதனால் எனது மகளை அழைத்து அவர் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். அதனாலேயே எனது மகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். என் மகள் சாவுக்கு கல்லூரி முதல்வரே காரணம். அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.