166
2024 ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்கியது.
அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்ஸை (Pat Cummins) ஏலத்தில் எடுக்க பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியும் இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் ஈடுபட்டது. அவருக்கான தொகை 10 கோடியை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.
இதனால் பெங்களூரு, ஐதராபாத் விலையை மாறி மாறி உயர்த்திக் கொண்டே சென்றன. இறுதியில் 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ்ஸை ஐதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது.
இதுவே ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒரு வீரர் விலைபோனதாக கருதப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ட்விஸ்ட் கொடுத்தது.
அந்த அணி கடும் போட்டிக்கு இடையே மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை (Mitchell Starc) ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதுதான் தற்போது வரை ஐபிஎல்லில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரரின் விலை ஆகும்.
இங்கிலாந்தின் சாம் கர்ரன் (Sam Curran) இதற்கு முன்பு 18.5 கோடிக்கு ஏலம்போனது அதிகபட்ச தொகையாக இருந்தது.
2024 சீசனுக்கான வீரர்களின் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன.
அடுத்த ஆண்டு அதிக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதால் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.