118
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராய்பூரில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 37 ரன்களும், கெய்க்வாட் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயரை 8 ரன்களில் சங்கா வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவை 1 ரன்னில் வார்ஸுய்ஸ் (Dwarshuis) ஆட்டமிழக்க செய்தார்.
ஆனால் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சிக்ஸர், பவுண்டரி என அதிரடியில் மிரட்டினர்.
ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்களும், ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்களும் விளாச இந்திய அணி 174 ரன்கள் குவித்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் வார்ஸுய்ஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரேண்டோர்ஃப் (Behrendorff) மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது இன்னிங்க்சை தொடங்கியது. 8 ரன்களிலேயே பிலிப் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அக்சர் படேல் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் அக்சர் படேல், சாஹர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், கேப்டன் மேத்யூ வேட் வெற்றிக்காக போராடினார். அவர் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் களத்தில் நின்றார்.
எனினும் அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்ற நிலையில், தற்போது தொடரை வென்றுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.