111
4 மாநில தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதையடுத்து மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 7ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் மிசோரம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மிசோரம் மாநிலத்திற்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இன்று காலையில் இருந்தே தெலுங்கானா தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக முன்னணி வகித்தது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க போவது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ராகுல்காந்தி தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களின் முடிவை நாங்கள் ஏற்கிறோம் – சித்தாந்த ரீதியான போர் தொடரும்.
தெலுங்கானா மக்களுக்கு நான் நன்றியுள்ளவன் ஆவேன். தெலுங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
கடின உழைப்பையும், ஆதரவையும் கொடுத்த உழைப்பாளிகளுக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றி” என்று கூறியுள்ளார்.