173
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தேமுதிக கட்சியின் தலைவரும், தமிழர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த், சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல்நலனில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி ஓய்விலேயே இருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்திருந்தார்.
இந்நிலையில், குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சலுடன் கூடிய சளி, இருமல் ஆகிய பிரச்சினைகளால் சமீபத்தில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுயமாக சுவாசித்து வந்த அவருக்கு அவ்வப்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைவார் என்று நம்புவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த்தின் உடல் நிலை பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும், விஜயகாந்த் உடல்நிலையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் கண்காணித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.