113
கோட்டாபய ராஜபக்ச அரசு 22 இலட்சம் மக்களை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டால் இருளில் வாழ வைத்தது.
அதேபோல், தற்போதைய அரசும் 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணிநேரமும் இருளில் வாழ வழிவகுத்துள்ளது – இவ்வாறு பாராளுமன்றத்தில் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில்,
மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அனுமதி கோரப்பட்டது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது இலங்கை மின்சார சபையின் மின் கட்டண உயர்வை மேற்கொள்வது தொடர்பாக மக்கள் சார்பில் சுயாதீனமான குழுவொன்றை அமைத்தே அனுமதி வழங்க வேண்டும்.
கடந்த காலத்தில் தான்தோன்றித்தனமாக மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கேட்டபோது இது மக்களுக்கு அநீதி அளிக்கக்கூடிய விடயம் என்று கூறி இடமளிக்கவில்லை.
ஆனால், தற்போதைய இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது மின் கட்டண அதிகரிப்புக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக பெய்த மழை காரணமாக நீர் மின்சாரத்தையே அதிகம் உற்பத்தி செய்தனர். இதனால் மின்சார சபைக்கு கிட்டத்தட்ட 51 மில்லியன் ரூபா இலாபம் கடந்த ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். எனவே, இவர்கள் மின்கட்டண அதிரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை சிறிதளவும் இல்லை.
அரசின் பொறுப்பற்ற தன்மையே 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் வசிக்க காரணமாகும்.
இலங்கை மின்சார சபை தன்னிச்சையாக இலாபமீட்டும் ஒரு நிறுவனமா? இந்த அரசானது அரசியல் இலாபம் தேடும் அரசாகும். அதனாலேயே சித்திரை மாதத்தில் மின்கட்டணத்தை குறைப்பதாக கூறுகிறது. – என்றார்.