97
அண்டார்டிகாவில் முதல் முறையாக ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
பூமியின் துருவப்பகுதியான அண்டார்டிகா கண்டம் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இருந்து வருகிறது.
இது மரம், செடி, கொடி ஆகியவை வளர வாய்ப்பில்லாமல் 2.16 கி.மீ ஆழத்திற்கு வெறும் பனியால் மட்டுமே மூடப்பட்டுள்ளது.
இப்போது உயிர்கள் வாழ தகுதியற்ற இந்த பனிப்பிரதேசத்தில், பல லட்சம் வருடங்கள் முன்பு வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படிமங்கள் அப்படியே பனியால் போர்த்தி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆகையால் அதனை ஆராய பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு கூடாரங்கள் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
கடினமான சூழல் நிலவுவதால் அங்கு செல்வதற்கு கூட இதற்கு முன்பாக இராணுவ விமானங்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் முதல் முறையாக கடந்த 15ம் திகதி அண்டார்டிகாவின் குயின் மவுண்ட் லேண்ட் எனும் இடத்தில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை விமானிகள் தரையிறக்கியுள்ளனர்.
இந்த விமானமானது 40 ஆராய்ச்சியாளர்கள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள், ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், சிறுசிறு வாகனங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை தாங்கி சென்றது.
இதுகுறித்து நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில் “இந்த வரலாற்று சாதனை எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் நாங்களும் இணைந்ததுள்ளோம். இந்த சாதனை மூலம் எங்கள் பணியாளர்கள், விமானிகள் மற்றும் எங்கள் போயிங் விமானங்களின் திறன் என்ன என்பதை நிரூபித்திருக்கிறோம்” என்றார்.