70
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரினை அவுஸ்திரேலியா அணி வென்றது.
நேற்று நடந்த இப்போட்டியில், அவுஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ட்ராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்தார். அதில் 15 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
இதன்மூலம் 6வது முறையாக அவுஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.
முன்னதாக அவுஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் “மைதானம் ஒரு சார்பாகவே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த 1.30 லட்சம் ரசிகர்களையும் அமைதியாக்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறியிருந்தார்.
அதன்படி, வெற்றியின் மூலம் அதனை செய்து காட்டியுள்ளார்.
தோல்விக்கு பிறகு மனம் திறந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. முடிந்த அளவு போராடினாலும் எதுவும் பலனளிக்கவில்லை. நாங்கள் 270-280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ட்ராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களை முழுமையாக ஆட்டத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனர்” என்றார்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி “நீங்கள் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இப்போதும், எப்போதும் நாங்கள் உங்களுடன் நிற்போம்” என்று ஆதரவை தெரிவித்தார்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். அரையிறுதி வரை தோற்கடிக்கவே முடியாத வகையில் சிறப்பாக விளையாடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த உற்சாகமானது பாராட்டுக்குரியது” என பாராட்டினார்.