75
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற விபரங்களை நாளை மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதை தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் முன்னிலையில் அவ்வழக்கு இப்போது வாதங்கள் அனைத்தும் முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2019 முதல் 2023 வரையிலான தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை சேகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இச்செயலுக்காக தேர்தல் ஆணையத்தை கண்டித்த நீதிமன்றம், அரசியல் கட்சிகளிடம் நன்கொடை வாங்கிய விபரங்களை வாங்கி உடனடியாக தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பத்திரங்களின் அனைத்து விபரங்களையும் நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுதல் அறிமுகப்படுத்தப்பட்ட 2018ம் ஆண்டிலிருந்து 2023 செப்டம்பர் 30ம் தேதி வரையில் வாங்கிய அனைத்து பத்திரங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற தேர்தல் ஆணையம், நன்கொடை அளித்தவர்கள் விபரங்கள், எவ்வளவு தொகை? எந்த திகதியில் பெறப்பட்டது? எந்த வங்கிக் கணக்கில் பத்திரங்கள் பணமாக்கப்பட்டது? இதுவரை வாங்கிய மொத்த மதிப்பு எவ்வளவு? ஆகிய விவரங்களை மூடப்பட்ட உறையில் தாக்கல் செய்யுமாறு அறிவித்துள்ளது.