130
இலங்கையில் உடனடி கடன் எனக் கூறி இணையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
மக்களுக்கு சிடமங்களை ஏற்படுத்தும் இவ்வாறான மோசடி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதன் மூலம் சாதாரண மக்களை நம்பவைத்து உடனடி கடன் வழங்கும் பல நிறுவனங்கள் தொடர்பில் மக்களிடம் இருந்து தற்போது பல முறைப்பாடுகள் வருகின்றன.
விளம்பரங்களை நம்பி,பலர் அவசர தேவைகளுக்காக அந்த நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்கள், குறித்த நிறுவனங்கள் இணையவழி மூலமாக தமது தகவல்களை பெற்று, கடன் வழங்கி, அதிக வட்டிக்கு குறித்த பணத்தை வசூலிக்கின்றன என தெரிவித்துள்ளனர்.
பெற்ற கடன் தொகையை விட மிகப் பெரிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள்ளது.
அவர்கள் கூறும் காலத்துக்கு முன்னர் அந்தத் தொகையை செலுத்த முடியாவிட்டால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
மக்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.
இது தொடர்பில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்,
“பணம் பெறவும், பணம் வசூலிக்கவும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் பதிவுகள் இன்றி, 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மக்களை ஒடுக்குகின்றன.”
இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் செயலி ஒன்றை உருவாக்கி அதனை மக்கள் டவுன்லோட் செய்ய தருகின்றன.
அந்த செயலி டவுன்லோடு ஆனதும் தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் குறித்த நிறுவனங்களுக்கு செல்கின்றன.
தகவல்களை பெற்ற பின்னர் 3,000 ரூபா முதல் பகுதி பகுதியாக கடன் வழங்க தொடங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 1வீதப்படி 365% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர சேவைகள் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரும் தொகை கடன்பெற்றோரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது – என்றார்.