73
அமெரிக்காவின் வாஷிங்டனில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழர் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 61 வயதாகும் அலி அக்பர் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் வேலை முடிந்துவீட்டிற்கு திரும்பும்போது, ரயில் சுரங்கப்பாதையில் தாக்குதலுக்கு உள்ளானார்.
அலி அக்பர் ரயிலில் பயணம் செய்யும் போது, கருப்பு சட்டை மற்றும் முகக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புலம்பிக்கொண்டே வந்துள்ளார். இதை ரயிலிலிருந்த சக பயணிகள் அனைவரும் கவனித்துள்ளனர்.
அப்போது குறித்த மர்ம நபர் திடீரென அலி அக்பரின் முகத்தில் ஓங்கி பலமுறை குத்தியுள்ளார்.
இதனால் நிலை குலைந்த அக்பர் மீண்டும் சுதாரிப்பதற்குள், கையில் வைத்திருந்த ஸ்க்ரூ ட்ரைவர் மூலம் அலி அக்பரின் தலையில் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கியதையடுத்து, குறித்த மர்ம நபர் சுரங்கப்பாதையில் குதித்து தப்பிச்சென்றுள்ளார்.
படுகாயமடைந்த அலி அக்பரை மீட்டு அங்கிருந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து சிகிச்சைக்கு பின் கூறிய அலி அக்பர், “மூன்று, நான்கு முறை தலையில் ஸ்க்ரூ டிரைவரால் குத்தினார். ஆனால், காயம் ஆழமாக ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயங்கள் இல்லை என்றாலும் அச்சமாக உள்ளது. நாளை என்ன நடக்கும் என்று அச்சமாக உள்ளது. பிரம்மை பிடித்ததுபோல் உள்ளது” என்றார்.
தாக்குதல் நடத்த நபர் பயன்படுத்திய ஸ்க்ரூ ட்ரைவரை காவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அலி அக்பர் தாக்கப்படுவது இது 2 வது முறையாகும். கடந்த சூலை மாதமும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் அவரது பல் உடைந்தது குறிப்பிடத்தக்கது.