2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பில், இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட நீதியமைச்சினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நல்லிணக்க அலுவலகங்களை நிறுவி, கிராமங்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.