ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் கலந்துகொள்ளபோவதில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே தனது கருத்தாகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் வருந்துவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.