73
இன்னும் பத்து10 வருடங்களில் தலைவர் பிரபாகரன் என்பவர யார் என்று கேட்கக்கூடிய நிலைமையே இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் “கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சி ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் பத்து வருடங்களில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் யார்? என்று கேட்கக்கூடிய நிலைமையே இங்கு காணப்படுகின்றது.
எமது மக்களிடம் மறதிப் பண்பு நன்றாக வளர்ந்து வருகின்றது. இதன்மூலம் மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
எனவே மாகாண சபையின் அவைத்தலைவர் என்ற ரீதியில் இந்த தீர்மானம் நிறைவேற்றியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. இதனை எண்ணி பெருமையடைகிறேன்.
மாகாண சபை செயற்பாட்டில் இருந்த காலகட்டத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த கைங்கரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இந்த சமூகம் இணைந்து பயணிக்க வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். – என்றார்.