கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, இதுவரை 1,913 குடும்பங்களைச் சேர்ந்த 6,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் நேற்று ஸ்ரீ வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, கடந்த 13ம் திகதி தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் குறித்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 1,390 குடும்பங்களைச் சேர்ந்த 4,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், மக்கள் 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இடைத்தங்கல் முகாம்களிற்கு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, கணக்காளர் எஸ்.சுதாகரன் ஆகியோர் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.