92
-இண்டிகோ விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு உரிய நேரத்தில் உடைமைகளை ஒப்படைக்க தவறியதால் நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்த நிகழ்வு நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வேதவியாஸ் – சுரபி. இவர்கள் இருவரும் தங்கள் விடுமுறையை கொண்டாட 2021யில் பெங்களூருவில் இருந்து அந்தமானுக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர்.
தம்பதி அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரை அடைந்துள்ளது. ஆனால் அவர்களின் உடைமைகள் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
அதில் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்றும், ஏன் வந்து சேரவில்லை என்றும் வேதவியாஸ் – சுரபி கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு விமான நிறுவனமோ மறுநாள் உடைமைகள் வந்து சேரும் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனாலும், இரண்டு நாட்கள் கழித்து தான் உடைமைகள் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் தம்பதி மன உளைச்சல் அடைந்துள்ளது. எனவே, நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் இண்டிகோ மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை ஆணையம் விசாரித்தபோது, பயணிகளின் உடைமைகளை விமானத்தில் ஏற்ற தவறியது உறுதியானது.
இதன் காரணமாக நுகர்வோரான தம்பதிக்கு ரூ.70,000 வழங்க வேண்டும் என ஆணையம் இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.