107
நேற்றுமுன்தினம் வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்பட்ட முன்னாள் போராளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளரான கார்த்தீபன் மீதும் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
இந்தநிலையில், வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக
அண்மையில், தபால் நிலையத்திற்கு முன்பாக மெய்யான தலைவர்கள் என்ற தலைப்புடன் படங்கள் தாங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த பதாகைகள் அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது படஙகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்துடன், அவர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
குறித்த பதாதைகளால் மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்த காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முன்னாள் போராளியும் தற்போதைய போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு உடன் சென்று அந்த பதாகைகளை உடன் அகற்றுமாறும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் அவருடன். வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை, வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர்.
அத்துடன் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அரவிந்தன் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கலும் செய்திருந்தனர்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட அரவிந்தன் இன்றையதினம் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டார். அவருக்கு வவுனியா நீதிவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரும் வவுனியா ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிஸார் அதே வழக்கை தாக்கல்செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் முன்னாள் போராளி அரவிந்தன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் வவுனியாவில் இன்று […]