103
கானா நாட்டை சேர்ந்த 28 வயதே ஆன கால்பந்து வீரர் ரஃபேல் த்வமெனா (Raphael Dwamena) போட்டியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேனியாவின் டாப் டிவிஷன் போட்டிகளில், KF Egnatia மற்றும் Partizani அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
இதில் Egnatia அணிக்காக ரஃபேல் ஆடினார். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரஃபேல் திடீரென சரிந்து விழுந்தார்.
சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவரிடம் விரைந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கொண்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பாதி வழியிலேயே ரஃபேல் உயிரிழந்துவிட்டார்.
ரஃபேலுக்கு 2020ல் இதய அறுவை சிகிச்சை செய்து தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டது.
அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரிய கோப்பைக்கான போட்டிகளில், Heartberg அணிக்கு எதிராக தன் Blau-Weiß Linz அணியில் ரஃபேல் விளையாடிய போதும் சரிந்து விழுந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் அவரிடம் ஓய்வு பெற கூறியுள்ளனர். ஆனால் அவரோ குணமான பின் மீண்டும் விளையாட்டிற்கு திரும்பினார்.
இந்த ஆண்டு அல்பேனிய அணியான KF Egnatia வில் சேர்வதற்கு முன்பு அவர் டேனிஷ், ஆஸ்திரிய மற்றும் சுவிஸ் லீக்குகளில் விளையாடியுள்ளார்.
ரஃபேல் த்வமெனாவின் மரணம் கால்பந்து சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், இந்த வாரம் நாட்டில் திட்டமிடப்பட்ட அனைத்து விளையாட்டுகளையும் ஒத்திவைத்துள்ளதாக அல்பேனிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் 9 கோல்கள் அடித்து லீக்கில் அதிக கோல்கள் அடித்த வீரராக திகழ்ந்துள்ளார். மேலும், அவர் 2017ல் கானாவில் அறிமுகமான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார். அவர் தேசிய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.