114
தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு 21 வயதான தங்கத்தாய் என்ற மகளும், 19 வயதான முத்து என்ற மகனும் உள்ளனர்.
தங்கத்தாய் கங்கைகொண்டான் பகுதியில் ஒரு சிப்காட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அங்கே, உடன் பணிபுரியும் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை அவர் காதலித்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் தங்கத்தாயின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து குடும்பத்தினர் பேசுகையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தும் தங்கத்தாய் காதலை கைவிடப் போவதில்லை என்று உறுதியுடன் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கத்தாயின் தம்பி முத்து அவரை தாக்கியுள்ளார்.
அதன் பின்னர் தன் அக்காவை வீட்டிற்கு வெளியே இழுத்து போட்டு சரமாரியாக வெட்டியுள்ளார்.
தங்கத்தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.
இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த தங்கத்தாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த முத்துவை கைது செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
வேறு சமூகத்து இளைஞரை காதலித்ததற்காக, தன் அக்காவையே கொன்ற 19 வயது இளைஞனின் இந்த வெறிச்செயல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.