109
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் பணிபுரிந்து வந்த 41 தொழிலாளர்கள், கடந்த நவம்பர் 12ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கினர்.
இதனை தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக சிறிய துளையிட்டு உள்ளே இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் மீட்புப் பணி நடந்து வந்த வேளையில் சுரங்கத்தினுள்ளே பெரிய அளவில் சத்தம் வந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற போது உள்ளே சிக்கியிருந்த இயந்திரங்கள் மீது மோதியதால், துளையிடும் இயந்திரம் பழுதானது.
பல தடைகள் ஏற்பட்ட போதும், 17 நாட்களுக்கு பிறகு நேற்று தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக குழாய் மூலம் வெளியே அழைத்து வரப்பட்டனர்.
சிறிது நேரத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களை வரவேற்க சுரங்கத்தின் வெளியே உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உட்பட பலர் காத்திருந்தனர்.
வெளியே வந்த தொழிலாளர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
தொழிலாளர்கள் மீட்கப்பட்டபோது வெளியே குழுமியிருந்த அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சின்னாலிசூர் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
அங்கே அவர்கள் ஒரு நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் அனைவரும் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டதால், இது பேரிடர் மீட்பு குழுவின் பாரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.