உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. ஏறக்குறைய தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியா, சீனாவுடன் நட்பை வலுப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றிருந்தார். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியதுடன், ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், போர் விமானங்கள் போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்திருந்தன.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி வடகொரியா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, வடகொரிய ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளது. இது உக்ரைன் மீதான போரில் மனித இழப்பை அதிகப்படுத்தும் என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா நிரூபிக்க தவறிவிட்டதாக வடகொரிய கிண்டல் செய்திருந்தது.
இந்த நிலையில் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதாக வடகொரிய மீது குற்றம்சாட்டியுள்ளன.
“வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா இராணுவ பொருட்களை பெறும் முயற்சியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சில ஆயுதங்கள் வழங்கியதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் மேலும் மனித இழப்பை அதிகரிக்கும்” என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.