88
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 6,000-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தனை உயிர்களை பலிகொண்ட இந்த போரானது இன்னும் முடிவடையாமல் மூன்றாவது வாரமாக நீண்டுகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததாக அரபு-இஸ்ரேலிய நடிகை மைசா அப்தெல் ஹாடி (Maisa Abdel Hadi) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, 1989 வரை ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில், பெர்லின் பாணியில் செல்வோம் (Let’s go Berlin-style) என, காஸா பகுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள வேலியை புல்டோசர் உடைக்கும் படத்தை நடிகை மைசா அப்தெல் ஹாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும், டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின்படி, சிரிக்கும் எமோஜிகளுடன் ஹமாஸால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட 85 வயதான பெண் யாஃபா அதாரின் படங்களையும் நடிகை மைசா அப்தெல் ஹாடி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில்தான், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் அதனைப் பாராட்டி, வெறுப்பு பேச்சுகளைப் பேசியதிற்காக நடிகை மைசா அப்தெல் ஹாடி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், `தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் அதற்கு ஆதரவு ஆகியவற்றுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை எப்போதும் தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும், அதில் நடிகை மைசா அப்தெல் ஹாடி பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் நடிகையின் கைது குறித்துப் பேசிய அவரின் வழக்கறிஞரும், மனித உரிமைகள் சங்கத்தின் இயக்குநருமான ஜாஃபர் ஃப்ராக், “மைசா அப்தெல் ஹாடி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்” என்றார்.
மேலும், இதற்கு முன்னதாக மைசா அப்தெல் ஹாடியின் இணை நடிகர் ஆஃபர் ஷெக்டர், “உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். நீங்களும் இதற்கு வெட்கப்பட வேண்டும். இஸ்ரேலின் நாசரேத் நகரில் நீங்கள் வாழ்கிறீர்கள். எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்களில் நடித்துவிட்டு, எங்கள் முதுகிலே குத்துகிறீர்கள்” என்று விமர்சித்திருந்தார்.
37 வயதாகும் மைசா அப்தெல் ஹாடி, பல்வேறு இஸ்ரேலிய நிகழ்ச்சிகள், ஹாலிவுட் பிளாக்பஸ்டர் `வேர்ல்ட் வார் Z’, மிக சமீபத்திய பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொடரான `பாக்தாத் சென்ட்ரல்’ ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.