105
நேற்றுமுன்தினம் இரவு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றுமுன்தினம் 30ஆம் திகதி வயோதிபர் (வயது 72) மற்றும் அவரது மனைவி (வயது 68) ஆகியோரே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது நகைகள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட போது சந்தேகநபர் தான் அணிந்திருந்த ஆடை மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை பை ஒன்றில் இட்டு கிணற்றில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.