106
‘நிலைக்கால நீதி’ என்ற விடயத்தில் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தின் போது மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு சாதகமாக எவ்வித முன்னேற்றமும் மேற்கொள்ளப்படாது என்பது உறுதியான விடயம்.
கடந்த இரு வாரங்களில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகளை எடுத்துநோக்கும் போது இலங்கை அரசு நல்லிணக்கத்தை செயற்படுத்தாமல் நடித்துக் கொண்டிருப்பது தெளிவாக விளங்குகின்றது.
இது பற்றி இந்த சபையில் பேசி எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் அலி சப்ரியின் செயற்பாடு சிங்கள மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளது?
நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதி பில்லியன் கணக்கில் உள்ளது. ஒரு நாட்டின் வெளி விவகார அமைச்சரே நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் கோட்டபாயவுக்கு எதிரான நடவடிக்கைகளை அலி சப்ரி ஆரம்பித்தாரா எனும் கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது புலம்பெயர் தேசத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரை ஒரு ரூபா நிதி கூட அவ்வாறு பெற முடியவில்லை. – என்றார்.