அனைத்து அரசியல் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கண்டி மாநகர சபையின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொறுப்புக்களை நல்ல வகையில் ஏற்றால் மட்டுமே மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயாரில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்பதாலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.