96
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை கவலை வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் கலந்து கொண்டமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அண்மையில் இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் தாம் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இவை, மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் எனவும், பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்த இலங்கை அரசின் வாக்குறுதிக்கு முரணானது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு உறுதியளித்த வகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அரசை வலியுறுத்தியுள்ளது.
குறித்த சட்டம், சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் . பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.