83
முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டியதுடன் அறிவுரைகளையும் கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கணித்துள்ளார்.
“இந்திய அணி தற்போது மனதளவில் ஒரு மாற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த மாற்றத்தை அது அப்படியே பின்தொடர வேண்டும். நான் இப்போது இந்தியாவின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தால் இதேபோல் தொடர்ந்து அதிரடியாக விளையாடுங்கள் என்று தான் கூறுவேன்” என்றார்.
இந்தியாவின் இந்த திட்டம் இதுவரை நன்றாக பலன் அளித்திருக்கிறது. இதை மாற்றினால் அனைத்தும் சாம்பலாகிவிடும். என்னை பொறுத்தவரை இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் இந்த உலகக்கோப்பையை வெல்ல முடியும். எப்போதும், நாம் நன்றாக விளையாடி வரும்போது ஏதாவதொரு ஆட்டம் மோசமான ஆட்டமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் வீரர்களுக்கு வரும். இந்த அச்ச உணர்வை எதிர்த்து எதிர்மறை எண்ணங்களை ஒழித்துவிட்டு விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் “நான் ஒரு தீவிரமான விராட் கோஹ்லி ரசிகன், தான் சிறந்த வீரர் என்பதை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
சச்சினுக்கு நிகரான வீரராக விராட் கோஹ்லி இருப்பார். உலகக்கோப்பைக்கு முன்பு கோஹ்லி கடினமான காலத்தில் இருந்தார். ஆனால் இப்போது நிலைமையே வேறு.
கோஹ்லி போன்ற வீரர் சரிவில் இருந்து மீண்டு வந்திருப்பது சிறப்பானது. ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் திறமை நிரந்தரமானது. அவருக்கும் மற்ற வீரர்களுக்கும் உள்ள வித்தியாசமே கோஹ்லியின் மனவலிமை தான். சில வீரர்களால் தான் இப்படி செயல்பட முடியும்” என்று விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டியுள்ளார்.