158
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரேத பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் கண்கள் இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள ரசூலா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (20).
இவர் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பூஜாவின் மரணம் குறித்து சந்தேகம் உள்ளது, கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு பூஜாவை கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதனையடுத்து, காவலர்கள் பூஜாவின் சடலத்தை மீட்டு புடானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட பூஜாவின் சடலத்தில் கண்கள் அகற்றப்பட்டிருப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து அவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இச்சம்பவம் குறித்து முறையிட்டனர்.
அப்போது உடல் உறுப்பு கடத்தலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மனோஜ்குமார் பூஜாவின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து மனோஜ் குமார், “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் என்னை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும்.
குற்றவாளிகள் யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், இரண்டாவது பிரேத பரிசோதனையை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொடுக்கப்பட்ட சடலத்தை, கண்கள் இல்லாமல் திருப்பிக் கொடுத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.