140
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க மாமியார் முயன்றதால், அவரை மருமகள் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகபுளிக்காட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ்.
இவரது தாயார் ஆரோக்கியமேரி, மனைவி பர்வீன் பானு. ஜேம்ஸ் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் கணவன் மனைவியிடையே நடந்த சண்டையின்போது ஜேம்ஸ் தனது மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் பர்வீன் பானு பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் காவல்துறையினர் ஜேம்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள தன் மகன் ஜேம்ஸை ஜாமீனில் எடுக்க அவரது தாயார் முயற்சி செய்து வந்துள்ளார்.
இது பர்வீன் பானுவுக்கு பிடிக்காததால் மாமியார்- மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவருக்குமிடையேயான சண்டையில் ஆத்திரமடைந்த பர்வீன் பானு, தனது மாமியாரான ஆரோக்கிய மேரியை அரிவாளால் கழுத்து மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் மிதந்த ஆரோக்கியமேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், ஆரோக்கியமேரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பர்வீன் பானு கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.