மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.
தமிழர் தாயகம் எங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் இம்மாதம் இடம்பெற உள்ளது.
இந்நிலையில் நினைவேந்தலை வரும் 27ஆம் திகதி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்யக் கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமையை எவரும் தடை செய்ய முடியாது. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவேந்தலை மேற்கொள்ள முடியும் என தெரிவித்த நீதிமன்றம் பொலிஸாரின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதேவேளை அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸாரால் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.