86
எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது.
கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள் மண்ணின் கலைஞர்களைப் புறக்கணித்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்சார் கலைகள் அத்தனைக்கும், தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் ‘இறக்குமதிக் கலாசாரம்’ யாழ்ப்பாணத்தில் முகிழ்ப்புப் பெற்றுள்ளமை இந்த மண்ணின் சுதேசியக் கலைஞர்களையும், இளைய தலைமுறைத் திறமையாளர்களையும் மலினப்படுத்துவதாகவே உள்ளது.
குறிப்பாக இனவிடுதலைப் போரையும், ஈழத்தமிழர்களது தேசிய இயக்கத்தையும் கொச்சைப்படுத்தியோரையும், இன அழிப்புப் போரில் எமது மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்படும் போது எந்தச் சலனமுமற்று தமது தனிமனித வளர்ச்சிக்காய் அயராதுழைத்தோரையும் எங்கள் மண்ணுக்கு அழைத்து மதிப்பளிப்பதும், ஈழத்திற்கு வந்த பின்னர் தமது தனிப்பட்ட நலன்களுக்கான அப்பிரபலங்கள் உரைக்கும் பசப்பு வார்த்தைகளும், இது இளைஞர்களைத் திசைதிருப்பும் ஓர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலோ என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
‘
அண்மையில் நடைபெற்ற, கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இருப்பழிந்து போய்க் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களது பண்பாட்டுத் தொடர்ச்சியை மீள நிலைநிறுத்துவதில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அத்தகையதோர் சூழலில் துறைசார் ஆற்றலர்கள் தம்மைத்தாமே நிலைநிறுத்துவதற்குரிய களங்களற்று இருக்கையில், மக்கள் திரட்சியை அதிபரிப்பதற்காக எங்கள் மண்ணின் ஆலயங்கள், அமைப்புகள் என்பவற்றில் பெரும்பாலானவை தென்னிந்தியக் கலைஞர்களுக்கும், மக்களிடையே பரிச்சயம் மிக்க பிரபலங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்ற நிலை மாற்றம்பெற்று, அந்தந்த மண்ணின் கலைஞர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர்களது கலைத்திறனுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் -என்றார்.
குமரநகர் சனசமூக நிலையத்தின் தலைவர் அ.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சி மண்ணின் பாரம்பரிய கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, அந்த மண்ணின் மூத்த கலைஞர்களும் மதிக்களிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.